நாம் பெரும்பாலும் ஹோட்டலுக்கு சென்றால், புதுவிதமான வீட்டில் செய்து சாப்பிடாத உணவுகளை தான் சாப்பிடுவோம். அப்படி வீட்டில் செய்திருக்கா ஆனால் அருமையான சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் அசைவ ரெசிபி தான் டிராகன் சிக்கன். நீளவாக்கில் வெட்டப்பட்ட சிக்கன் துண்டுகளை பொரித்து, சுவையான சாஸில் பிரட்டி கொடுப்பார்கள். அப்படிப்பட்ட சுவையான சிக்கன் ரெசிபியை இனி வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். இந்த ரெசிபியை இந்த வார விடுமுறையில் செய்து கொடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். வாருங்கள், இப்போது டிராகன் சிக்கன் எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம் (நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
  • கொத்தமல்லி - சிறிது
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

  • சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
  • மிளகாய் பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
  • முட்டை - 1
  • மைதா - 1/2 கப்
  • சோள மாவு - 1/4 கப்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • மிளகு - 1 டீஸ்பூன்

சாஸ் தயாரிப்பதற்கு…

  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • வரமிளகாய் - 3
  • முந்திரி - 20
  • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • பெரிய குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
  • தக்காளி கெட்சப் - 1/4 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • சர்க்கரை - 2 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும்.
  • அதில் ஊற வைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி, 15 நிமிடம் ஊற விடவும். *
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் சூடானதும், அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
  • அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு அதில் மிளகாய் பூண்டு விழுது, சோயா சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடங்களுக்கு நீர் வற்றி கெட்டியாகும் வரை கிளறி விடவும்.
  • அடுத்து அதில் வறுத்து எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் பரிமாற தயார்.

Image Courtesy: yummytummyaarthi